• Breaking News

    கார் வாய்க்காலில் விழுந்து விபத்து..... 5 பேர் பலி.....

     


    கர்நாடகாவில் கார் ஒன்று வாய்க்காலில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    கர்நாடக மாநிலம் திப்டூர் பகுதியில் இருந்து கார் ஒன்றில் சந்திரப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்செய், பாபு, ஜெயண்ணா ஆகிய 5 பேர் மைசூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கார் ஒன்றில் சென்றுள்ளனர். உறவினர்களான 5 பேரும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மைசூரில் இருந்து மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.


    மாண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரம் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த விஸ்வேஸ்வரய்யா வாய்க்காலில் தவறி விழுந்தது.



    இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாண்டியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


    மீட்பு பணியின் போது, உயிரிழந்த ஒருவரின் செல்போனில் அழைப்பு வந்ததை அடுத்து, போலீஸார் அவர்களை அடையாளம் கண்டதோடு, இது தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மாண்டியா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களான 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    இதனிடையே கடந்த 5 அண்டுகளில் இதே இடத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு பேருந்து ஒன்று வாய்க்காலில் பாய்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். தொடரும் விபத்துகளை தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தர்ஷன் புட்டனய்யா தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், இன்று நடைபெற உள்ளது.

    No comments