காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையொட்டி சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனையை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சைதாப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முருகன் கோவில் பின்புறம் நின்று கொண்டிருந்த 3 மூதாட்டிகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அதேபகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி (வயது 76), விமலா (75), கமலா (70) என்பதும், 3 பேரும் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அங்கு வரும் நபர்களிடம் விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 300 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
0 Comments