ஓட்டம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவி...... காவல் நிலையத்தில் ஆஜர்......

 


காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவி இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி இந்துமதி. பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரான இவர் உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அங்குள்ள  பெரும்பான்மை சாதியினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அந்த சமூகத்தைச் சேர்ந்த யாரும் இவரை எதிர்த்து போட்டியிடாததால் இவர்  வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கு நடுவே, ஊரார் யாரும் தங்களுக்கு ஒத்துழைக்காததால் பாண்டியனின் உறவினர்கள் மலை கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.பாண்டியனும் இந்துமதியும் தங்களின் இரு ஆண் குழந்தைகளுடன் மலை கிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்துமதி கடைக்குச் சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடி இருக்கிறார்.

மேலும், இந்துமதியை காணாதது குறித்து நாயக்கனேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட சிலர் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் பாண்டியன் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில், இந்துமதி இன்று காவல் நிலையத்திற்கு திடீரென வந்தார். நிலுவையில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் வழக்கு தொடர்பாக சிலர் தன்னை வற்புறுத்துவதாகவும், இதனால் குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதில் மனமுடைந்து வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டதாகவும் போலீஸாரிடம் அவர் தெரிவித்தார்.

தனது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள செய்தி குறித்து தொலைக்காட்சிகளில் வந்த செய்தியை அறிந்து காவல் நிலையத்துக்கு வந்ததாக காவல் துறையினரிடம் அவர் தெரிவித்தார். இந்துமதியை போலீஸார் விசாரணைக்குப் பின் அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments