தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்மையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அதில், இந்து மதத்திற்கு எதிரான முழு வெறுப்பு பேச்சை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாய்முடி கொண்டு அமைதியாக பார்வையாளராக மேடையில் இருந்தார்.இதனால், இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தகுதியை சேகர் பாபு இழந்துவிட்டார். எனவே, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகவில்லை என்றால், செப்.11ம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் முழுவதும் இந்து அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.அந்தவகையில், அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் முற்றுகை பேரணி நடத்தினர்.பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜகவினர் சாலையில் திடீரென அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறைக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவின் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சனாதனத்தை அழிப்பேன் என திமுகவினர் கிளம்பி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுப்போம், பாஜக அடுத்த முறை வீதியில் இறங்கினால் வேற மாதிரி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
No comments