• Breaking News

    திடீர் உடல்நலக்குறைவு: மேல் சிகிச்சைக்காக பெங்களூரு சென்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

     


    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேலத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.


    இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


    முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. மருத்துவமனையில் அமைச்சர் சக்கரபாணி, திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், உள்ளிட்டோர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


    இந்த நிலையில், தருமபுரி அருகே காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    No comments