நாங்குநேரி சம்பவம்: சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் நலம் விசாரிப்பு
நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்துரையை, நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நலம் விசாரித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த மாணவர் கும்பல் வெட்டி உள்ளது இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சாதிய ரீதியிலான தாக்குதல் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், சின்னதுரை, அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.
மேலும், அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் சிறுவனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
No comments