• Breaking News

    சந்திரயான்-3 சாதனையை பாகிஸ்தான் டிவிகளில் ஒளிபரப்பு செய்யுங்கள்... பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்....

     வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான் 3 சாதனையை, பாகிஸ்தான் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளை அந்நாட்டு முன்னாள் அமைச்சரான ஃபவத் சௌத்ரி வலியுறுத்தி உள்ளார்.

    அடுத்த சில மணி நேரங்களில் நிலவின் பரப்பில் நிகழவிருக்கும் அதிசயத்தை நேரலையில் காண உலகமே தயாராகி வருகிறது. நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் அங்கமாக, சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் இறங்கும் தருணம் மெய்யாலுமே மனிதகுல வரலாற்றில் புதிய சாதனையாக இடம்பெறப் போகிறது.

    நிலவில் நீர் இருப்பதை உலகுக்கு கண்டு சொன்னது சந்திரயான் 1. சந்திரயான் 2 திட்டத்தின் லேண்டர் கடைசி நேரத்தில் சொதப்பினாலும், அதன் ஆர்பிட்டர் இன்று வரை துடிப்புடன் இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நிலவின் வெளியில் சந்திரயான் 3 நுழைந்தபோது, சந்திரயான் 2 ஆர்பிட்டர் சிக்னல் தந்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.இந்த வரிசையில், அடுத்த சில மணி நேரங்களில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பூப்பாதம் பதிக்க இருக்கிறது. அமெரிக்கா, சீனா, சோவியத் ரஷ்யா வரிசையில் நிலவுக்கான விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக்கியதில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. அதே வேளையில், நிலவின் தென்துருவத்தில் தடம் பதிப்பதன் மூலம், முந்தைய 3 தேசங்களையும் முந்தப் போகிறது இந்தியா.

    இந்தியாவின் இந்த சாதனையை வஞ்சமின்றி அனைத்து தேசங்களும் புகழ்ந்து வருகின்றன. பங்காளி தேசமான பாகிஸ்தானும் இதில் விதிவிலக்கல்ல. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஃபவத் சௌத்ரி. இவர் இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தை விண்ணார புகழ்ந்துதள்ளி வருகிறார்.”இந்திய மக்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமன்றி மனித குலத்துக்கே வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை சந்திரயான் 3 சாதிக்க இருக்கிறது” என்று வாழ்த்தியிருக்கும் சௌத்ரி, ”ஆக.23, மாலை நிகழும் அந்த தருணத்தை பாகிஸ்தான் தொலைக்காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்” என தனது தேசத்தின் ஊடகங்களுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

    முன்னதாக சந்திரயான் 2 திட்டம் பகுதியளவில் தோல்விக்கு ஆளானபோது, இந்த ஃபவத் சௌத்ரி அதனைக் கிண்டலடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசும்போது, “பூமியில் இருந்து பார்த்தாலே நிலா தெரியும்போது, அங்கே செல்ல வேண்டியது அவசியமா?” என்ற அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பினார்.

    சந்திரயான் 2 தோல்வியைக் கொண்டாடும்விதமாக, “இந்தியா இனி பாலிவுட் சினிமாவில் மட்டுமே சந்திரனுக்கு செல்ல முடியும்” என்று நக்கலடித்தார். ஆனால், அவரே சந்திரயான் 3 திட்டத்தை வாயார வாழ்த்தும்படி காலத்தின் கோலம் அமைந்துவிட்டது.

    No comments