கோவை வரும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம்.....
தமிழகத்தில் ஆளுநர் நீட் உள்ளிட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது, மக்கள் நலனுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் செயல்படுவது மற்றும் சர்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அரசுக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் மொக்கு நிலவி வருகிறது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இன்று வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருதமலை சாலையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை முன்வைத்து முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதில் ஒரு பகுதியாக கோவைக்கு இன்று வருகை தரும் ஆளுநரை கண்டித்து, சாலையில் முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநர் ரவியே திரும்பி போ என்ற வாசகம் அடங்கிய பேனர் மற்றும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காததற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
No comments