சந்திரயான்-3 விண்கலம் நிலவிற்கான பயணத்தைத் தொடங்கியுள்ளது: இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்
இந்தியா உட்பட உலக நாடுகள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த சந்திரயான்-3 விண்கலம் தற்போது விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான்-3 விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் ‘லேண்டர், ரோவர்’ போன்ற சாதனங்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் சந்திரயான் 3 குழு LVM3 M4 ராக்கெட் விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்திய பிறகு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சந்திராயன்-3, அதன் சுற்றுப்பாதையில், சந்திரனை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. விண்கலத்தின் ஆரோக்கியம் சாதாரணமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. எங்களின் LVM3 ஏற்கனவே சந்திரயான்-3 விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது. வரும் நாட்களில் சந்திரயான்-3 விண்கலம் அதன் சுற்றுப்பாதையை உயர்த்தி, சந்திரனை நோக்கி பயணிக்க அனைத்து நல்வாழ்த்துக்களையும் வழங்குவோம் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கூறியுள்ளார்.
No comments