• Breaking News

    அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய அறிவிப்பை நிறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி அந்தர்பல்டி

     


    அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மீதான நீதிமன்ற காவலை வரும் ஜூலை 12வரையில் நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சையில் இருப்பதால் அவர் வகித்து வந்த அமைச்சர் பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு , செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்தது.இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி உள்ளிட்ட குற்றவழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.


    செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில் அமைச்சர் பதவியில் செந்தில் அவர் தொடர்ந்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.


    ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி தரப்பு நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments