சம்மர் ஸ்பெஷல் மோர் செய்வது எப்படி?
கோடை வெயில் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பநிலை செஞ்சுரி அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலில் இருந்து காத்துக்கொள்ள தண்ணீர், பழச் சாறுகள், குளிர்ச்சியான உணவுகள் எடுத்துக்கொண்டாலும், வெயிலை எதிர்கொள்ள குளிர்ச்சியான மோர்தான் மிகவும் ஏற்ற நீராகாரம் ஆகும்.
வெயிலுக்கு மோர் குடியுங்கள் என்றால், பலரும் தயிர் வாங்கி தண்ணீர் ஊற்றி கலக்கிவிட்டால் அதுதான் மோர் என்று நினைத்துக்கொண்டு அதை குடிக்கிறார்கள். ஆனால், முறையாக கிராமத்து ஸ்டைலில் செய்த மோர், மிகவும் குளிர்ச்சியாகவும் தாகம் தீர்க்கும் வகையில் வெயிலுக்கு இதமாக இருக்கும்.இந்த கோடை வெயிலை எதிர்கொள்ள அனைவரும் வீட்டிலேயே மோர் செய்து குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அதனால், கிராமத்து ஸ்டைலில் மோர் செய்வது எப்படி என்று அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள். மோர் செய்வது மிகவும் எளிது.
மோர் செய்ய தேவையான பொருள்கள்:
தயிர்-1கப்
தண்ணீர்-2 கப்
நறுக்கிய இஞ்சி-1 ஸ்பூன்
கருவேப்பிலை-5-7
கடுகு-1 ஸ்பூன்
பெருங்காயம்-தேவையான அளவு
மிளகு-2 ஸ்பூன்
சீரகத்தூள்-சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கடைய வேண்டும். மிதக்கும் வெண்ணெய்யை எடுத்துவிடுங்கள். நன்றாக கடைந்த பின்னர், அதில் நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகு இதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கிவிட வேண்டும்.
இதையடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகத்தூள் ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும். அதை கடைந்த மோரில் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் மோரை பிரிட்ஜில் வைக்கவும். அல்லது, மண்பாண்டத்தில், குளிர்ச்சியான இடத்தில் ஒரு மணி நேரம் வைத்திருங்கள். பிறகு, குளிர்ச்சியான குளு குளு மோர் குடியுங்கள். மோரில் சுவை வேண்டும் என்றால், தேவைப்பட்டால், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து கொள்ளலாம். இதுதான் கிராமத்து ஸ்டைல் குளிர்ச்சியான மோர். வெயிலை எதிர்கொள்ள வீட்டிலேயே குளிர்ச்சியான மோர் செய்து குடியுங்கள்.
No comments