• Breaking News

    இந்தியாவிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை ஹைதராபாத்தில் திறப்பு

     


    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை, தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். சிலையைத் திறந்து வைத்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த சிலை இந்தியாவிலேயே அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலைகளில், மிகவும் உயரமான சிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் ஹுசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயரம் உள்ள பீடத்தில் அண்ணல் அம்பேத்கரின் 125 அடி சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த பீடம் நாடாளுமன்ற கட்டிடம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 11.4 ஏக்கரில் சுமார் ரூ.146.5 கோடியில், 360 டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் 114 டன் வெண்கலத்துடன் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கேசிஆர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரது உருவப்படத்திற்கு, பிரம்மாண்ட மாலை அணிவிக்கவும், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும், தெலுங்கானா மக்கள் மற்றும் நாடு முழுவதும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள்ளது. அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்வில், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முதன்மை விருந்தினராகவும், நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறையினர், மூத்த அறிஞர்கள்,  கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


    No comments