• Breaking News

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர்


    ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

    இதில் தமிழகம்,கர்நாடகத்தில் இருந்த வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி,அம்மனை வழிபட்டனர்.

    பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா மார்ச் 20 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு,ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.

    விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இன்று அதிகாலை2.45 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு,தாரை தப்பட்டை முழங்க,மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.

    குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 4 மணிக்கு பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார்.

    அதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள், பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம்.எல். ஏ., உள்ளிடோர் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். 

    அதனைத் தொடர்ந்து,குண்டம் இறங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று அம்மனை தரிசித்து சென்றனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments