• Breaking News

    டெங்கு காய்ச்சலுக்கு பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி

     


    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் ஊராட்சி உள்ளது. சங்கரநத்தம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தில் முறையான சாலை கழிவுநீர் கால்வாய்கள், பொது சுகாதார வளாகம், தெருவிளக்கு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பலமுறை கிராம பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் சுப்புத்தாயிடம் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கிய கழிவு நீர் மத்தியில் சுகாதாரமின்றி வசித்து வருகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் சிறுவர்களுக்கு காய்ச்சல் இருந்து வந்தது இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது ஒரே மகன் பாலமுருகன் வயது (15) பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் சரியான சுகாதாரம் இன்றி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கழிவு நீர் வடிய முறையான கால்வாய் வசதி செய்து தர பஞ்சாயத்து மறுப்பதாகவும் இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கண்டுகொள்வதில்லை என்றும் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்த பிறகாவது முறையான சாலை மற்றும் கழிவு நீர் வாருங்கள் ஏற்படுத்தி தருவார்களா என்று கேள்விக்குறியுடன் பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    No comments