பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.இந்த ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து தினந்தோறும் விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் என பல்வேறு தெய்வங்களின் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் இந்த பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது.முன்னதாக நேற்று இரவு தியாகராஜ ப பெருமான் அஜபா நடனத்துடன் தேரி எழுந்தருளினார்.
இந்த பெரிய தேரினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து முருகன் அம்பாள் சண்டிகேஸ்வரர் திருத்தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது.இந்த தேர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஓடத் தொடங்கியது என வரலாறுகள் தெரிவிக்கின்றது. இந்த தேரின் மொத்த உயரம் 96 அடியாகவும் அகலம் 67 அடியாகவும் உள்ளது. இதன் மொத்த எடை 350 டன்னாக இருக்கிறது.இந்த தேரினை இழுப்பதற்கு ஒன்ரறை டன் எடையுள்ள ஒரு கிலோமீட்டர் தூர முடைய வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது.தேர் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் தேரை திருப்புவதற்கும் தேரினை நிறுத்துவதற்கும் புளிய மரத்தால் ஆன 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த தேரின் முகப்பு பகுதியில் ரிக் யஜுர் சாம அதர்வண என்கிற நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகள் பாயும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் நடுவில் யாழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரின் பின் பக்கத்தில் புல்ட்ரவுசர் இயந்திரம் மூலம் தேர் தள்ளப்படுகிறது.இந்த மிகப் பெரிய தேர் ஆடி அசைந்து வரும் காட்சியை பக்தர்கள் பக்தி பரவசத்தால் கண்டு களிக்கின்றனர்.ஆரூரா தியாகேசா என்று விண்ணதிர முழக்கங்களை எழுப்பிய படி பக்தி பரவசத்தில் திளைத்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற இந்த தேர் திருவிழாவை காண்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரக்கூடும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக 1500 காவல்துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நான்கு வீதிகளிலும் 50 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் 45 நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஐந்து ட்ரோன் கண்காணிப்பு காமிரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோன்று வாகனங்களை நிறுத்துவதற்கு என்று 8 தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சீருடை இல்லாத காவலர்களும் பொது மக்களுக்கு மத்தியில் திருட்டு ஈவ்டீசிங் போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தொடர்ந்து இந்த தேர் திருவிழா கீழ வீதி தெற்கு வடக்கு வீதி என நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையடியினை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு பின்புறம் நடமாடும் மருத்துவ குழுவினர் அடங்கிய அவசர ஊர்தி வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
0 Comments