உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக குடும்ப அட்டையில் பெயரை நீக்கிய 'அறிவாளி' அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி தாலுக்கா, அரசர்குளம் கீழ்பாதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராணியம்மாள்.இவரது மகன் தமிழ்செல்வன் கடந்த 16.12.2022 அன்று இறந்து விட்டார். குடும்ப அட்டையில் இறந்த தமிழ்செல்வன் பெயரை நீக்குவதற்கு பதிலாக உயிருடன் இருக்கும் அவரது தாயார் ராணியம்மாள் பெயரை இறந்துவிட்டாதாக நீக்கியுள்ளனர் அறிவாளி அதிகாரிகள்.
இது குறித்து ராணியம்மாள் கூறுகையில் எனது மகன் காவலராக பணிபுரிந்தவன் தற்கொலை செய்து கொண்டான். இறந்து 5 மாதங்கள் கூட ஆகவில்லை. 40 வருடமாக நான் தான் குடும்ப தலைவராக இருக்கின்றேன். ஆனால் தற்போது குடும்ப அட்டையில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி எனது பெயரை இறந்துவிட்டதாக காரணம் கூறி எனது பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கிவிட்டு எனது கணவர் பெயரை குடும்பதலைவராக மாற்றி இருக்கிறார்கள்.எதன் அடிப்படையில் நான் உயிரோடு இருக்கும் போது எனது பெயரை நீக்கினார்கள். எனது கணவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை.தற்போது நானும் ரேசன் கடைக்கு சென்று எந்த பொருட்களும் வாங்க முடியவில்லை காரணம் கேட்டால் உங்கள் பெயர் குடும்ப அட்டையில் இல்லை என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் அறந்தாங்கி வட்டாட்சியர் ( குடிமை பொருள்) அவர்கள் தான் காரணம். எனது பெயரை நீக்கிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
ராணியம்மாள்எனது மகனை இழந்து வாழ்வாதாரத்திற்கு கூட சிரமப்படும் எங்களுக்கு கருணை கூர்ந்து எனது பெயரை மீண்டும் குடும்ப அட்டையில் குடும்ப தலைவராக மாற்றி தர வேண்டும்மென வட்ட வழங்கல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இறந்தவர் பெயரை நீக்குவதற்கு பதிலாக உயிருடன் இருப்பவர் பெயரை நீக்குவதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இது போன்ற சில அறிவாளி அதிகாரிகளால் தான் அரசுக்கு அவபெயரும், மக்களுக்கு சிரமத்தினையும் ஏற்படுத்துகின்றன. மக்களை இப்படி வாட்டி வதைப்பதால் அதிகாரிகளுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments