அனேக மக்கள் பயணிக்க முதல் விருப்பமாக தேர்வு செய்வது ரயில் பயணத்தை மட்டுமே. ஏனெனில் களைப்பு தட்டாமலும், இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ளவும் வசதிப்படுவது ரயில் பயணம் மட்டுமே. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணத்தைத்தான் அதிகம் விரும்புகின்றனர் என்றால் அது மிகையில்லை. அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே கோட்டங்கள் கோடை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்குகின்றன. இதன் மூலம் கூட்ட நெரிசலை குறைக்கவும் மக்கள் இலகுவாக பயணிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. அந்த அடிப்படையில் தென்மேற்கு ரயில்வே பெங்களூரில் இருந்து சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்குகிறது. பெங்களூரில் காலை 7-50 மணிக்கு ( வண்டி எண் 06547) புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு இரவு 8-30க்கு சேர்கிறது. மறுமார்கத்தில் வேளாங்கண்ணியில் இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 க்கு பெங்களூர் சென்றடைகிறது. பெங்களூரில் இருந்து இன்று தனது முதல் பயணத்தை துவக்கிய அந்த ரயிலுக்கு திருவாரூர் ரயில் சந்திப்பில் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். இணைச்செயலாளர் அக்பர் பாட்ஷா ஓட்டுநர்களுக்கும் நிர்வாகி அண்ணாதுரை ரயில் மேலாளருக்கும் சால்வை அணிவித்தார்கள். இலியாஸ், சேகர் ஆகியோர் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர் பேராசிரியர் பாஸ்கரன், வணிக ஆய்வாளர் திரு.உதய சுகுமாரன் நிலைய மேலாளர் திரு. குமரன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய செயலாளர் திரு. ரமேஷ், ஜேசீஸ் (ராயல் திருவாரூர்) தலைவர் திரு. கோபிநாத், சாய் சத்யன், சிக்னல் திரு. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments