ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை இழிவுபடுத்தும் வகையில் முகநூல் பதிவிட்டதாக பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடார் சங்கங்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு


திருவாரூர் நகரத்திற்குட்பட்ட சிவம் நகரில் வசித்து வருபவர் செந்தமிழ்ச் செல்வி.இவர் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியையாகவும் திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பிலும் இருந்து வருகிறார்.இவர் தனது முகநூல் பக்கத்தில்  தமிழிசை சௌந்தரராஜனையும் தங்கள் சமூகப் பெண்களையும்  இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாடார் சங்கங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தமிழ்ச்செல்வி அவரது முகநூல் பக்கத்தில் தமிழகத்தில் பெரியார் பிறந்தது பெரிதா இல்லை நாயன்மார்கள் ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்பதை வருங்காலத்தில் பார்ப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதை குறிப்பிட்டு பெரியார் இல்லை என்றால் தமிழிசை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் பரவாயில்லையா மேடம் என்று பதிவிட்டதுடன் பெண்கள் மேலாடை இன்றி இருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.


இந்த நிலையில் நாடார் சங்கங்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் செந்தமிழ் செல்வி தனது முகநூல் பக்கத்தில் மேதகு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை குறித்தும் அவர் சார்ந்துள்ள சமுதாய பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையிலும்  கொச்சைப்படுத்தும் வகையிலும் பதிவிட்டுள்ளார். இதனால் தங்கள் சமுதாய மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments