பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதி உலா வந்தால் சாமி குத்தம் ஏற்படும், எனக்கூறி பூட்டிக் கிடக்கும் காளியம்மன் கோவில்
திருவாரூர் அருகே பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதி உலா சென்றால் சாமி குத்தம் ஏற்படும் எனக் கூறி கடந்த பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் கோவிலை திறந்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என நடுநிலையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரி அருகே பூந்தளூர் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பியன் பூந்தளூர் கிராமம் உள்ளது. இந்த ஊரில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் காளியம்மன் கோவில் தெரு உள்ளது. காளியம்மன் கோவில் தெருவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், மாரியம்மன் கோவில் தெருவில் பட்டியல் இன சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ள காளியம்மன் கோவில் ஆனது மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருவிழா நடத்த முற்பட்டபோது, மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் தங்கள் தெருவுக்கும் சுவாமி வீதி உலா வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஏற்கவில்லை. இதுகுறித்து குடவாசல் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை என்பதால் காளியம்மன் கோவில் பூட்டப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண்கள் காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பாக எரவாஞ்சேரி போலீசார் 19 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் இந்த கோவில் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் பூட்டி கிடக்கும் கோவிலை திறந்து திருவிழா நடத்த வேண்டும். என்ற கோரிக்கை அந்த கிராம மக்களிடத்தில் எழுந்துள்ளது.
இது குறித்து பட்டியலின சமூக தரப்பினர் கூறும்போது... எங்கள் பகுதி மக்கள் கோவிலுக்கு வழிபட சென்றாள் கோவிலின் வெளியில் நிற்க வைத்து திருநீறு கொடுக்கிறார்கள் மேலும் சுவாமி ஊர்வலத்தின் போது வீட்டுக்கு வீடு சுவாமி வந்து நிற்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் காளியம்மன் கோவில் திருவிழா நடத்தி எங்கள் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சுவாமியை எழுந்தருள செய்ய வேண்டும். அங்கு வந்து நாங்கள் தரிசனம் செய்து கொள்வோம் ஆனால் நாங்கள் பட்டியல் இன மக்கள் என காரணம் காட்டி எங்களை ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறும் போது... இது பழமையான கோயில் இந்த கோவிலில் ஏற்கனவே இதுபோன்று நடந்த போது குழந்தை ஒன்று இறந்து சுவாமி குத்தம் ஆகிவிட்டது எனவே ஐதீகத்தை மாற்றி விடாமல் மாரியம்மன் கோவில் தெரு, முகப்பிலேயே அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். இதனால் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments