மதுரையில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டத்தில், செல்லுார் ராஜூ கோஷ்டியினரும், டாக்டர் சரவணன் கோஷ்டியினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இப்போதே அ.தி.மு.க.,வினர் தயார் ஆகி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டம் வருகிறது.
கூட்டத்தில் நிர்வாகிகள் வெற்றியை நோக்கி ஓடுமாறு, கட்சி நிர்வாகிகளுக்கு தெம்பூட்டி வருகின்றனர்.அந்தவகையில், நவ.,22ம் தேதி திருநெல்வேலி ஜங்ஷனில் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் கள ஆய்வு கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு களஆய்வு கூட்டத்தை நடத்தினார். ஆய்வுக்கூட்டத்தில், இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். அடிதடியை கண்டு, ஆய்வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், இன்று (நவ.,25) மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேப்டர் ஆப் காமர்ஸ் அரங்கில் அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை முன்னிலை நடைபெற்ற இந்த கள ஆய்வு கூட்டத்தில் செல்லுார் ராஜூ கோஷ்டியினரும், டாக்டர் சரவணன் ஆதரவாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். தங்களது கருத்துகளை சொல்ல அனுமதிக்கவில்லை என நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அமைதியாக இருக்கும் படி, மைக்கில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் துளி அளவு கூட மதிக்காமல் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments