திருச்செங்கோட்டில் தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவிகளிடம் ஆபாச பேச்சு..... அகாடமி உரிமையாளர் கைது.......


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் அஸ்வின் என்கிற மெய்யழகன்(30). இவரது அகாடமியில் படித்த மற்றும் படித்து வரும் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் சினிமாவில் நடிக்கலாம், சினிமா தொடர்பு தனக்கு இருக்கிறது, என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டதோடு அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாங்குட்டை பாளையத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வரும் வெங்கடேசன் என்பவரது 23 வயது மகள் அர்த்தநாரீஸ்வரர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து வருகிறார். அந்தப் பெண்ணை குறித்து, அவரது உறவுக்கார பெண்ணிடம், அவரது நடத்தை குறித்தும், ஒழுக்கம் குறித்தும் அவதூறாக பேசியதோடு, இதுபோல் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை வெங்கடேசன் அவரை நேரில் சந்தித்து, இதுகுறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அஸ்வினை பிடித்து நகர காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். அங்கு அவரது செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் ஆபாச புகைப்படங்களும், அவரது லீலைகளும், பெண்களிடம் போனில் பேசிய பதிவுகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேசன் அஸ்வின் என்கிற மெய்யழகன் குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 294 B, 509,506(1), ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு நீதிபதி சுரேஷ்பாபு அஸ்வினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் பேரில் அவர் திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட 30 பெண்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் அல்லது அது குறித்த காட்சிகள் எதையாவது பதிவு செய்து வைத்திருக்கிறாரா? என்பது குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.


ஜெ ஜெயகுமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்  9942512340

Post a Comment

0 Comments